இலங்கையின் தென் மாகாணம் தற்போது நாட்டிலேயே அதிகமான மாணவர் போதைப்பொருள் பழக்கமும் குற்ற உலகச் செயல்பாடுகளும் பதிவாகியுள்ள பகுதியாக மாறியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அக்குரெஸ்ஸ, கொடபிடிய தேசிய பாடசாலையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய அவர், மேற்குத் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2 இலட்சம் 30 ஆயிரத்து 980 பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கியுள்ளதாக கூறினார். இது நாட்டின் இளைஞர்களிடையே போதைப்பொருள் பரவல் எவ்வளவு தீவிரமானது என்பதை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“ஆனால், மற்ற மாகாணங்களை விட தென் மாகாணமே நாட்டை இந்த ஆபத்தான நிலைக்கு தள்ளிக்கொண்டு செல்கிறது,” என்று வீரசிங்க கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தென் மாகாணம் குற்ற உலகச் செயல்பாடுகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மாணவர் போதைப்பொருள் பிரச்சினையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், சிறையில் சிறுவர்களும் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார். “தற்போது ஐந்து வயதிற்குக் குறைந்த 42 குழந்தைகள் தாய்மார்களின் குற்றச் செயல்கள் காரணமாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஐந்து வயது வரை தாயுடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு அவர்களை பிரிக்க வேண்டி வருவது எங்களுக்குப் பெரும் மன வேதனையாக உள்ளது,” என அவர் கூறினார்.